உத்தரப்பிரதேச மாநிலத்தில், பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்தநிலையில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் உத்தரப்பிரதேச தேர்தலை முன்னிட்டு, இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
அப்போது பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர், உத்தரப்பிரதேசத்தில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், அதில் 8 லட்சம் வேலை வாய்ப்புகள் பெண்களுக்கு வழங்கப்படும் என கூறியுள்ளார். மிகவும் பின்தங்கிய சமூகங்களை சேர்ந்த இளைஞர்கள் தொழில் தொடங்க 1 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும் என உறுதியளித்த பிரியங்கா காந்தி, அரசு பணி தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார். மேலும் அரசு பணிக்கான தேர்வுகளை எழுத பயணம் மேற்கொள்வோர் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் அறிவித்துள்ளார்.
அரசு பணிக்கான தேர்வில், இடஒதுக்கீட்டில் செய்யப்படும் மோசடிகளை தடுக்க சமூகநீதி மேற்பார்வையாளர் நியமிக்கப்படுவார் எனவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, உத்தரப்பிரதேசத்திற்கான காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்து கேள்வியெழுப்பபட்டது . அதற்கு பிரியங்கா காந்தி, காங்கிரஸில் உங்களுக்கு வேறு எதாவது முகம் தெரிகிறதா? என கேள்வியெழுப்பினார்.
இதனால் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. பிரியங்கா காந்தி இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.