படித்து கன்னியாஸ்திரி ஆகி, கான்வென்ட் ஒன்றில் ஆசிரியர் பணியில் சேர வேண்டுமென்ற பெரிய கனவோடு, புனித பயஸ் கான்வென்டில் தங்கியிருந்து கோட்டயம் பி.ஜி.எம். கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார் பீனா என்ற அபயா (19).
எந்த நேரமும் கையில் புத்தகமும் பைபிளுமாக எல்லோரிடமும் அன்பாகப் பழகி வந்த அபயா, 1992 மார்ச் 27-ஆம் தேதி காலையில் கான்வென்டில் உள்ள கிணற்றில் இறந்து மிதந்து கிடந்தார். கிணற்றின் அருகில் அபயாவின் ஒரு கால் செருப்பும் அவள் தங்கியிருந்த அறைக்குள் இன்னொரு கால் செருப்பும் கிடந்தன. அவளின் உடலைக் கிணற்றில் இருந்து தூக்கிப் பார்த்த போது கன்னத்தில் நகக்கீரல் ஒன்றும் இருந்தது.
இது தற்கொலை அல்ல கொலைதான் என்பது உறுதியாகத் தெரிந்தும் போலீசார் அதைத் தற்கொலை என முடித்துக் கொண்டனர். இது அப்போது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தலைமையில் கூடிய மக்கள், கொலை செய்யபட்டுத்தான் அபயா இறந்ததாகப் போராடினர். இதனால் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று போராடினார்கள். இதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட சி.பி.ஐ.யும் அது தற்கொலைதான் எனக் கூறினார்கள். இதைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் ஐகோர்ட்டை நாடினார். அதன் பிறகு கோர்ட் உத்தரவுப்படி 2007-ல் அமைக்கபட்ட சி.பி.ஐ. குழு அபயா சாவு, கொலைதான் என அறிக்கை அளித்தது.
இதைத் தொடர்ந்து அபயா வழக்கு சூடுபிடித்தது. சி.பி.ஐ. குழுவில் இருந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "கேரளாவில் நடந்த ஒரு முக்கிய, பரபரப்பான வழக்கு. கன்னியாஸ்திரிகள் தங்கியிருக்கும் மடத்திற்குள், அடிக்கடி பாதிரியார் தாமஸ் கோட்டூா் வந்து செல்வார். இதனால் வழக்கை முதலில் அந்தப் பாதிரியார் பக்கம் திருப்பினோம். பாதிரியார் அந்த மடத்திற்குள் பல கன்னியாஸ்திரிகளிடம் தகாத உறவு வைத்திருந்தார். அதே நேரத்தில் மற்றவர்களைவிட அதிக நெருக்கமாக கன்னியாஸ்திரி ஷெபி தான் இருப்பார். இவர்களுக்கு உடந்தையாக இன்னொரு பாதிரியார் ஜோஸ் இருந்தார்.
இந்த நிலையில்தான், பாதிரியார் தாமஸ் கோட்டூரும் கன்னியாஸ்திரி ஷெபியும் தனிமையில் இருப்பதை அபயா பார்த்துள்ளார். இதனால் இவர்களைப் பற்றி வெளியே தெரிந்துவிடுமோ என்ற அச்சத்தில், தாமஸ் கோட்டூா், ஷெபி மற்றும் ஜோஸ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து, அபயாவை கோடாரியால் தாக்கி கிணற்றுக்குள் தள்ளிவிட்டுக் கொலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திருவனந்தபுரம் சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்துவந்தது. இதற்கிடையில் ஜோஸ் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாராம் இல்லாததால், அவர் விடுதலை செய்யப்பட்டார். இதனால் இந்த வழக்கின் திசைமாறியது. குற்றவாளிகளும் தப்பிக்கும் வகையில் பல முட்டுக்கட்டைகள் ஏற்பட்டது.
சாட்சிகளுக்கு நெருக்கடியால் பலர் பிறழ் சாட்சியளித்தனர். இதற்கிடையில் இந்த வழக்கில் இருந்து தப்பிக்க, ஷெபி தான் கன்னித்தன்மையை இழக்கவில்லை, கன்னிதன்மையுடன் தான் இருக்கிறேன் என்பதற்காக, 'ஹைநநோ பிளாஸ்டிக் ஆப்ரேஷன்' செய்தததை ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மகப்பேறு நிபுணர் லலிதாம்பிகா கண்டுபிடித்தார். இதற்கிடையில் மேலும் சில முக்கிய ஆதாரங்கள் அழிக்கபட்டிருந்தன. அதுபோல் முக்கிய சாட்சிகளும் பல்டி அடித்தன.
இந்த நிலையில்தான், அபயா கொலை நடந்த அன்று அங்கு திருடப் போன திருடன் அடைக்காடு ராஜீ, அந்தக் கொலையை நேரில் பார்த்தார். அவர் திருடனாக இருந்தாலும் மனசாட்சி கொண்டவராக இருந்ததால், அபயா கொலை வழக்கில் மிக முக்கிய சாட்சியாக வந்து சாட்சி அளித்ததன் விளைவு தான், 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நல்லதொரு முக்கியத் தீா்ப்பு கிடைத்தது என்றார்.
பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் கன்னியாஸ்திரி ஷெபிக்கு ஆயுள் தண்டனையும் கிடைத்தது.
இதற்கிடையில் இந்தத் தண்டனைக்கு மிக முக்கிய சாட்சியாக இருந்த அடைக்காடு ராஜூ கூறும் போது, “கொலை நடந்த போது என்னால் சத்தம்போட முடியவில்லை. நான் சத்தம் போட்டிருந்தால் என்னையும் கொன்று இருப்பார்கள். அவர்களும் தப்பித்து இருப்பார்கள். நான் சாட்சியாக மாறியதும் திருடன்தான் என என்னை நினைத்து, சாட்சி சொல்லாமல் இருக்க 3 கோடி ரூபாய் தருவதாக என்னிடம் பேசினார்கள். எனக்கு அந்த பணம் முக்கியமாகத் தெரியவில்லை அபயாவை என் மகளாக நினைத்துத் தான் சாட்சி சொன்னேன். இப்போது திருட்டுத் தொழிலையும் விட்டு விட்டேன்” என்றார்.