கொல்கத்தாவில் இளநிலை மருத்துவர் தாக்கப்பட்டதால், கடந்த 11ம் தேதியிலிருந்து மேற்குவங்க மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உடனே வேலைக்கு திரும்புமாறு உத்தரவிட்டார். ஆனால் மருத்துவர்கள் வேலைக்கு திரும்பவில்லை.
இந்த தாக்குதலை கண்டிக்கும் வகையில் நாடுமுழுவதும் 24 மணிநேர வேலை நிறுத்தத்திற்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு அழைத்திருந்தது. இதற்கு நாடுமுழுவதும் ஒத்துழைப்பு வந்தது.
இதனால் இன்று புறநோயாளிகள் பிரிவு இயங்காது என்றும், உள்நோயாளிகள் பிரிவில் உள்ள நோயாளிகளை சந்திக்கும் பணி நடைபெறாது என்றும், அதே நேரத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு தொடர்ந்து இயங்கும் எனவும் தெரிவித்துள்ளனர். கிட்டதட்ட நாடுமுழுவதும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கம் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளது.
மருத்துவர்களுக்கு எதிரான இந்த வன்முறையை தடுக்க மத்திய அரசு விரிவான சட்டத்தை இயற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் இந்த போராட்டம் ஆறாவது நாளாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.