Skip to main content

ஆப்கான் விவகாரம்; இந்தியாவின் அழைப்பைப் புறக்கணித்த பாக் - தவித்த சீனா!

Published on 09/11/2021 | Edited on 09/11/2021

 

taliban

 

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அங்கு தங்கள் இடைக்கால ஆட்சியை நடத்திவருகின்றனர். இருப்பினும் இதுவரை தலிபான்களின் அரசை எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. அதேநேரத்தில், பாகிஸ்தான் விரைவில் தலிபான்களின் ஆட்சியை அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தலிபான்களை அங்கீகரிக்கும் விவகாரத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளன.

 

அதேநேரத்தில், ஆப்கானிஸ்தானில் தாங்கள் செய்துள்ள முதலீடுகள் காரணமாக, அந்த நாட்டில் தலிபான்கள் ஆட்சி அமைத்துள்ளது குறித்து பல்வேறு உலக நாடுகள் கவலையடைந்துள்ளன. மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகள், தலிபான்களால் தங்கள் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என கவலையடைந்துள்ளன.

 

இந்தசூழலில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்க இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான ஆலோசனைக்கு ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் முக்கிய பங்கினை வகிக்கும் சில நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. இந்தநிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் மறுத்திவிட்டது. அதேபோல் சீனாவும் திட்டமிடல் சிக்கல்களால் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என மறுத்துவிட்டதாகவும், அதேநேரத்தில் இராஜதந்திர தொடர்புகள் மூலம் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும் ரஷ்யா, ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில், ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவும் தீவிரவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம், அந்தநாட்டில் நடைபெறும் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் விட்டு சென்ற ஆயுதங்களை தலிபான்கள் பயன்படுத்தும் ஆபத்து ஆகியவை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும் இந்தியாவுக்கும்,இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள ஏழு நாடுகளும் பிரச்சினையின் மூலகாரணம் பாகிஸ்தான் என்பதில் ஒருமித்த கருத்து இருப்பதாகவும், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பாகிஸ்தானின் செயலுக்கும் அதன் நோக்கத்திற்கும் வேறுபாடு இருப்பதாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் கருதுவதாகவும் கூறப்படுகிறது.

 

தலிபான் அரசு அங்கீகரிக்கப்படாததால், இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அவர்கள் அழைக்கப்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் நாடுகளின் பிரதிநிதிகள் பிரதமர் மோடியை சந்திப்பார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்