உத்தரப் பிரதேசம் மாநிலம், பரேலி பகுதியைச் சேர்ந்தவர் 31 வயது பெண். இவர் நீண்ட காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். தனது 16 வயதில் இருந்தே வயிற்று வலியால் அவதிப்பட்ட இந்த பெண், கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்ததில், அந்த பெண்ணுக்கு முடி உண்ணும் ஒரு அரிய உளவியல் கோளாறான டிரைகோலோடோமேனியா நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார் என்பது மருத்துவருக்கு தெரியவந்தது. இதனால், சிறு வயதில் இருந்தே முடிகளை உண்ணும் பழக்கத்தை கொண்ட அவர், அதிகளவில் முடிகளை உண்டு வயிற்று வலியால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் எம்.பி.சிங் மற்றும் மருத்துவர் அஞ்சலி சோனி தலைமையிலான மருத்துவக் குழு, அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுத்தது. அதன்படி, அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில், அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த 2 கிலோ எடைக் கொண்ட முடிகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, அவரது நிலைமைக்கான அடிப்படைக் காரணங்களைத் தீர்க்க தற்போது உளவியல் ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.