கலைஞரின் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக அரசு சார்பில் திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞருக்கு சென்னை மெரினாவில் 134 அடி உயரத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த நல்லதம்பி, சென்னையைச் சேர்ந்த தங்கம், நாகர்கோவிலைச் சேர்ந்த ஜூசை அந்தோணி ஆகியோர் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். கடலில் பேனா நினைவு சின்னம் அமைத்தால் மீன்கள் பாதிக்கப்படும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்குகள் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல், சுதாங் பிரியா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை தொடங்கிய போதே இது தொடர்பான வழக்குகளுக்கு பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகலாமே, அனைத்திற்கும் உச்ச நீதிமன்றமே விசாரிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.