புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் கோரிமேடு பகுதியில் உள்ள அரசு மருந்தகத்தில் மத்திய அரசு வழங்கிய 7 வெண்டிலேட்டர்களை பெற்று சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "மத்திய அரசு தற்போது அனுப்பியுள்ள 7 வென்டிலேட்டர்கள் சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை 17 வெண்டிலெட்டர்களை மத்திய அரசு புதுச்சேரிக்கு வழங்கியுள்ளது. புதுச்சேரியில் 350 வெண்டிலெட்டர்களும், 1,800 ஆக்சிஜன் படுக்கைகளும் உள்ளது. தினந்தோறும் 8,000-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் அனைத்து மருந்துகளும் தேவையான அளவு உள்ளது.
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கிலேயே கரோனா தொற்று 50 சதவீதம் குறைந்துள்ளது. இதில் மக்கள் பங்கு அதிக அளவில் உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 95 சதவீதம் பேர் தடுப்பூசி எடுக்காதவர்கள். எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சில கூடுதல் தளர்வுகளாக வாகனம் பழுது நீக்கம் செய்பவர்கள், சுயதொழில் செய்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கூடுதல் கவனத்துடன் பணி செய்ய வேண்டும்" என கூறினார்.