புதுச்சேரியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கலந்துகொள்ள வந்திருந்தார். இந்நிலையில் அவர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல்கள் உருவாகி உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவரை மாற்றக் கோரி ஒரு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். கடந்த ஆட்சியில் புதுச்சேரியில் மிக வலுவாக இருந்த காங்கிரஸ், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரும் தோல்வி அடைந்திருக்கிறது. இதற்கு கட்சி தலைமைதான் காரணம் என காங்கிரஸின் ஒரு தரப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்பொழுது ஆலோசனை முடித்துவிட்டு வெளியே வந்த தினேஷ் குண்டு ராவை கண்டித்து கோஷமிட்டனர். புதுச்சேரி காங்கிரஸ் தலைவருடைய பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்ததால் புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அப்பொழுது அங்கு சலசலப்பு ஏற்பட்ட நிலையில், கைகலப்பு ஏற்படும் அளவிற்கு அமளி ஏற்பட்டது. தினேஷ் குண்டூராவின் காரும் தாக்கப்பட்டது. அதன் பிறகு அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டார் தினேஷ் குண்டு ராவ்.