இந்தியாவில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் கரோனா இரண்டாவது அலை ஏற்பட்டது. இந்த இரண்டாவது அலை முதல் அலையைவிட கடுமையான பாதிப்புகளையும், அதிகமான உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. இந்தநிலையில், கரோனா இரண்டாவது அலை எதனால் ஏற்பட்டது என்ற தகவல் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மரபணு வரிசைமுறை சோதனை மேற்கொள்ளும் ஆய்வகங்களின் கூட்டமைப்பான ஐ.என்.எஸ்.ஏ.சி.ஓ.ஜி-யின் விஞ்ஞானிகள் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் விஞ்ஞானிகள் ஆகியோர் இணைந்து நடத்திய ஆய்வில், மரபணு மாற்றமடைந்த 'டெல்டா' வகை கரோனா வைரஸ்தான் இரண்டாம் அலை ஏற்படுவதற்கு முதன்மை காரணம் என தெரியவந்துள்ளது.
மேலும் அந்த ஆய்வில், B.1.617 வகை மரபணு மாற்றமடைந்த கரோனா வைரஸும் அதன் தொடர்ச்சியான B.1.617.2 வகை மரபணு மாற்றமடைந்த கரோனா வைரஸும்தான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம் என்றும், இந்த வகை கரோனாக்கள் ஆல்ஃபா வகை (பிரிட்டனில் முதன்முதலில் கண்டறியப்பட்டது) கரோனாவைவிட 50 சதவீதம் அதிகம் பரவும் தன்மையைக் கொண்டதாக உள்ளதென்பதும் தெரியவந்துள்ளது.