டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொதுமுடக்கம், பொருளாதாரம், உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கூறுகின்றனர்.
அமைச்சரவை கூட்டத்திற்கு பின் காணொளி மூலம் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டுவர மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வருவதற்கான அவசரச் சட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளும், 58 கூட்டுறவு வங்கிகள் வருகின்றன. விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் முடிவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் குஷி நகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது" என்றார்.