இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு கொண்டாட்டங்களின் தலையாய நிகழ்வாக, வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி, செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றுகிறார். இதற்காக, 1,000 கண்காணிப்பு கேமராக்களுடன் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
75வது சுதந்திர தினத்தைக் கொண்டாட நாட்டின் தலைநகரம் உற்சாகமாகத் தயாராகி வருகிறது. முக்கிய இடங்களில் பறக்கும் தேசிய கொடிகள், ஓவியங்கள் என ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் டெல்லி முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வழக்கமான வான்வெளி பாதுகாப்புப் பணிகளில் இந்த ஆண்டு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி உரையாற்றும் செங்கோட்டை, முக்கிய பிரமுகர்கள் வரும் பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைக் கண்காணிக்க, குறிப்பாக, 1,000 உயர்தர கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
செங்கோட்டையில் நுழைவு வாயிலில் மூன்றடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, காவல்துறையினர் தொடர்ச்சியாக, கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை பேரா கிளைடர்கள், ஹாண்ட் கிளைடர்கள், அனல் காற்று பலூன்கள் போன்ற வான்வெளி பொருட்களைப் பறக்கவிடக்கூடாது என காவல்துறையினர் உத்தரவுப் பிறப்பித்துள்ளனர்.
இவைத் தவிர தேசிய பாதுகாப்புப் படை உயரதிகாரிகள், துணை ராணுவப் படை வீரர்கள் என 10,000- க்கும் மேற்பட்டோர் டெல்லி முழுவதும் தீவிரப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா கேட் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றிற்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. டெல்லியின் அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு வரும் அனைத்து வாகனங்களும் தணிக்கை செய்யப்பட்ட பிறகே டெல்லிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
டெல்லியில் உள்ள தங்கும் விடுதிகள், விருந்தினர் மாளிகைகள் வாகன நிறுத்துமிடங்கள், உணவகங்கள் என அனைத்தும் காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. வெள்ளையனை எதிர்த்து வீரமிகு தியாகம் புரிந்த டெல்லியின் சாலைகள் 75வது சுதந்திர தின விழாவிற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.