நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை அவை முழுக்க வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து நாடாளுமன்றத்தில் வண்ணப் புகைக் குப்பிகளை வீசியதாகக் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 6 பேரையும் 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு அனுமதி கோரியது. மேலும் நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் என்பது திட்டமிடப்பட்ட சதி என டெல்லி போலீசார் வாதத்தை முன் வைத்தனர். இதனையடுத்து 4 பேருக்கும் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், அவர்களுக்கு விதிக்கப்பட்ட நீதிமன்றக் காவல் நேற்றுடன் (31-01-24) முடிவுக்கு வர, அவர்களின் நீதிமன்றக் காவலை வரும் மார்ச் 1 ஆம் தேதி நீட்டிப்பு செய்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூழ்நிலையில், கைதான 6 பேரில் 5 பேர் தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அளித்த அந்த புகாரில், ‘இந்த சம்பவத்தில் அரசியல் கட்சித் தலைவர்களுடன் தொடர்பு உள்ளதாக ஒப்புக்கொள்ள வேண்டும் என எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்து போலீசார் கொடுமைப்படுத்துகின்றனர். 70க்கும் மேற்பட்ட வெற்றுக் காகிதங்களில் கையெழுத்திட வேண்டும் என்று வற்புறுத்தி கையெழுத்து வாங்கினர்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரை கருத்தில் கொண்ட நீதிபதி ஹர்தீப் கவுர், இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பான விசாரணை பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.