டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.
இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் “எனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக எனது நெருங்கிய உதவியாளர் மூலம் பா.ஜ.க. என்னை அணுகியது. நான் பா.ஜ.க.வில் சேரவில்லை என்றால் அடுத்த ஒரு மாதத்தில் நான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவேன். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் மேலும் 4 ஆம் ஆத்மி தலைவர்களான சவுரப் பரத்வாஜ், அதிஷி, துர்கேஷ் பதக் மற்றும் ராகவ் சாட் ஆகியோரை கைது செய்வார்கள்.
நேற்று அமலாக்கத்துறை சவுரப் பரத்வாஜ் மற்றும் எனது பெயரை (அதிஷி) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கில் ஒன்றரை ஆண்டுகளாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.யிடம் கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் இதனை சொல்கிறேன். இது தொடர்பான விவரங்கள் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையிலும், சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையிலும் உள்ளது. எனவே இதனைக் கூறுவதற்கு காரணம் என்ன. அரவிந்த் கெஜ்ரிவால் மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் ஆகியோர் சிறையில் இருந்தும் ஆம் ஆத்மி கட்சி இன்னும் ஒற்றுமையாகவும் வலுவாகவும் இருப்பதாக பா.ஜ.க. கருதுகிறது என்பதே காரணம். இப்போது ஆம் ஆத்மி கட்சியின் அடுத்த கட்ட தலைமை நிர்வாகிகளை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
மேலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “நம் நாட்டில் இது தொடர்பாக இரண்டு சட்ட விதிகள் உள்ளன. ஒன்று இந்திய அரசியலமைப்பு சட்டம், மற்றொன்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியாது எனக் கூறுகிறது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றவாளி இல்லை. அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டப்பேரவையில் தனிப் பெரும்பான்மையை கொண்டுள்ளார். எனவே அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய எந்த காரணமும் இல்லை. அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா செய்தால் அது எதிர்க்கட்சியினர் அரசாங்கங்களை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சிக்கு மிக எளிமையான மற்றும் நேரடியான தீர்வாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.