டெல்லி ஐஐடியில் உள்ள விடுதியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ஐஐடியில் 21 வயதான அனில்குமார் என்ற மாணவர் பி.டெக்(கணிதம் மற்றும் கம்ப்யூட்டிங்) பயின்று வந்துள்ளார். இவர் ஐஐடியில் உள்ள விந்தியாச்சல் விடுதியில் தங்கி தனது படிப்பைத் தொடர்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை தனது அறையில் அனில்குமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நேற்று மாலை அவரது அறை நீண்ட நேரமாகத் திறக்கப்படாததால், சந்தேகத்தின் பேரில் போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அறையின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அனில்குமார் சீலிங்கில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்திருக்கிறார். அவரது உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுதியின் விதிமுறைப் படி, அனில் ஜூன் மாதமே விடுதியை காலி செய்திருக்க வேண்டும். ஆனால், அவரது பட்டப் படிப்பு பாடத் திட்டத்தில் சில பாடங்களில் தேர்ச்சி பெற முடியாமல் போனதால், அவருக்கு ஆறு மாத கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக அனில்குமார் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் பி.டெக் படித்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை சாதிய ரீதியாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாகத் தான் நடந்ததாகக் கூறி மாணவர்கள் வளாகத்தில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.