கரோனா பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளித்து வந்த ஒரு மருத்துவமனையைச் சேர்ந்த 29 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,000 ஐ கடந்துள்ள சூழலில், இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 872 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,185 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் கரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த 29 சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ரோகிணி பகுதியில் உள்ள டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான சுகாதார ஊழியர்கள் இதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், துறை மருத்துவர்கள் மற்றும் பிற ஊழியர்கள் உட்பட 29 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே மருத்துவமனையில் பணியாற்றும் 29 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சூழலில், சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.