உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா தடுப்பூசிக்குப் பூஸ்டர் டோஸ்களை செலுத்த தொடங்கியுள்ளன. இதனையொட்டி இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சூழலில், அண்மையில் இதுதொடர்பாக விவாதிக்க குழு கூட்டம் நடைபெற்றது. ஆனால், அதில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் மத்திய அரசு, பூஸ்டர் டோஸின் தேவை குறித்த ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறையின் ட்ரான்ஸ்லெஷனல் ஹெல்த் சயின்ஸ் அண்ட் டெக்னாலாஜி நடத்தும் இந்த ஆய்வில், ஆறு மாதங்களுக்கு முன்னர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, செல்-மீடியேட்டட் எதிர்ப்பு சக்தி மதிப்பிடப்படவுள்ளது.
40 வயதுக்கு மேற்பட்டோர், 40 வயதுக்குக் குறைவானோர், இணை நோயுள்ளவர்கள், கரோனாவிலிருந்து மீண்ட பின்னர் தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் என நான்கு பிரிவுகளாக ஆய்வில் பங்கேற்கும் நபர்கள் பிரிக்கப்பட்டு, அவர்களது செல்-மீடியேட்டட் நோய் எதிர்ப்பு சக்தி மதிப்பிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.