டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பாகப் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையாலும், சி.பி.ஐ.யாலும் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதன் பேரில், கடந்த 13ஆம் தேதி திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால் வெளியே வந்தார். இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய கெஜ்ரிவால் இரண்டு நாட்களில் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், நவம்பர் மாதம் நடைபெறும் மகாராஷ்டிரா தேர்தலுடன் டெல்லி தேர்தலும் நடக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த திடீர் அறிவிப்பு, ஆம் ஆத்மி கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அதே சமயம், அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்யப்படவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து, டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் இன்று (17.09.2024) ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்ததன் பேரில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் அதிஷி டெல்லி புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஆம் ஆத்மி சட்டமன்றக் குழுத் தலைவராகவும் அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட அதிஷி மற்றும் மற்ற கேபினட் அமைச்சர்களுடன் டெல்லி துணைநிலை ஆளுநர் அலுவலகத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர். இதனையடுத்து டெல்லி முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை டெல்லி துணைநிலை ஆளுநரிடம் அவர் வழங்கினார். அதே சமயம் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கட்சியின் மூத்த தலைவர் அதிஷி சிங்,ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.