Skip to main content

‘ஐ லவ் யூ நானா...’ - தந்தையின் உடலைப் பார்த்து கதறி அழுத மகன்; கலங்க வைக்கும் சம்பவம்!

Published on 24/04/2025 | Edited on 24/04/2025

 

A crying son hugging his father's body at pahalgam incident

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று முன்தினம் (22.04.2025) பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்குச் சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த குதிரை ஓட்டி, திருமணமாகி தேனிலவுக்குச் சென்ற விமானப் படை அதிகாரி, கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் என பல கனவுகளோடு காஷ்மீருக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாத தாக்குதலில் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது நாட்டையே கலங்க வைத்துள்ளது. பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க தங்களது வேதனைகளைத் தெரிவித்து வருவது பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. இந்த தாக்குதலில், ஆண்கள் மட்டும் குறிவைக்கப்பட்டதாகவும், இந்துவா? முஸ்லிமா? என்று மதத்தைக் கேட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வாயிலாக தகவல் வெளியாகி வருகிறது. 

A crying son hugging his father's body at pahalgam incident

அதே நேரத்தில், ஸ்ரீ நகரில் இருந்து விமானம் மூலம் சுற்றுலாப் பயணிகளும், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள்ளும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆந்திரப் பிரதேச மாநிலம், நெல்லூரைச் சேர்ந்த ஐடி ஊழியரான மதுசூதனன் ராவின் உடல் இன்று காலை சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. அப்போது, அவரது மனைவி, மகள் மற்றும் 8ஆம் வகுப்பு படிக்கும் மகன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதில் மதுசூதனின் மகன், தனது தந்தையின் சவப்பெட்டியை கட்டிப்பிடித்து, ‘ஐ லவ் யூ நானா (அப்பா)’ என்று கதறி அழுத காட்சியால் அங்கிருந்தவர்கள் கலங்கி போனார்கள். 

அதன் பின்னர், அந்த சிறுவனை தேற்றி அவரது உறவினர்கள் அந்த இடத்தில் இருந்து அழைத்துச் சென்றனர். இருப்பினும், தந்தையை விட்டு பிரிய மனமில்லாமல் அவரது உடல் இருந்த சவப்பெட்டி மேல் முத்தம் கொடுத்தே அழுதான். இதை அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. அதன் பின்னர், மதுசூதனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான நெல்லூருக்கு இறுதிச் சடங்குகளுக்காக கொண்டு செல்லப்பட்டது.

சார்ந்த செய்திகள்