
போராட்டத்தின் போது உள்ளூர்வாசி ஒருவரை, முன்னாள் பா.ஜ.கவின் உதவியாளர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், சிக்கபல்லாபூர் மாவட்டத்தின் கனகனகொப்பா கிராமத்தில் உள்ள சுரங்கத்திற்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் விவசாய நில இழப்பு குறித்து கிராம மக்கள் கவலை தெரிவித்து, அந்த திட்டத்தை எதிர்த்து உள்ளூர்வாசிகள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ நாராணசாமியின் உதவியாளர் சகலேஷ் குமாருக்கும் இடையே வாக்குவாதம் எற்பட்டது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த சகலேஷ் குமார், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போராட்டம் நடத்திய ரவி என்பவரின் மீது சுட்டார். இதில், ரவிக்கு பலத்த காயமடைந்தது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மஞ்சேனஹள்ளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் ஏராளமான பொதுமக்கள், இந்த சம்பவத்திற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீதியில் இறங்கி போராட தொடங்கினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அங்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தினர். அதன் பின்னர், முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏவின் உதவியாளர் சகலேஷ் குமார் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.