குஜராத் மாநிலம் தஹோத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நரேஷ் தேசாய். இவருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்பது மணியளவில், அவரது தந்தை நட்வர்லால் தேசாய்க்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதனைக் கண்டு நரேஷ் தேசாய் அதிர்ச்சியடைந்துள்ளார். ஏனெனில் அவரது தந்தை நட்வர்லால் தேசாய் கடந்த 2011ஆம் ஆண்டு மரணமடைந்துவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடந்துவருகிறது. இறந்த நட்வர்லால் தேசாய்க்கும் தற்போது தடுப்பூசி செலுத்திக்கொண்ட நட்வர்லால் தேசாயின் பேத்திக்கும் ஒரே பான் (PAN) எண் என்பதால், அவ்வாறான குறுஞ்செய்தி வந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது என்றும் தஹோத் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆனால் குறுஞ்செய்தியில் பேத்தியின் பெயரின்றி இறந்தவரின் பெயர் எவ்வாறு வந்தது என்பது இன்னும் மர்மமானதாகவே இருக்கிறது.
அதே மாவட்டத்தைச் சேர்ந்த நிபூல் சர்மா என்பவருக்கும் ஞாயிற்றுக்கிழமை அன்று, அவரது அம்மாவிற்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. ஆனால் அவரது தாயார் ஏப்ரல் 15ஆம் தேதியே மரணமடைந்துள்ளார். தனது அம்மா மார்ச் 2ஆம் தேதி முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டதாகவும், ஏப்ரல் 15ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்துவிட்டதாகவும் நிபூல் சர்மா கூறியுள்ளார். தனது அம்மா இரண்டாவது டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்துப் பேசிய தஹோத் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி, குறுஞ்செய்தி வந்ததற்கான காரணத்தை அதிகாரிகள் ஆராய்ந்துவருவதாக கூறியுள்ளார்.