ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள், தங்களது ஆட்சியை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்கப் படை வெளியேற நாளையே (31.08.2021) கடைசி நாள் என்பதால், அதன்பிறகு தலிபான்கள் தங்களது புதிய அரசை அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைவது இந்தியாவிற்கு சிக்கலை உருவாக்கும் என கருதப்படுகிறது. ஏற்கனவே ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர், தலிபான் தலைவர்களை சந்தித்து காஷ்மீரில் தங்களது நடவடிக்கைகளுக்கு உதவுமாறு கோரியதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆப்கானிஸ்தான் சூழ்நிலை இந்திய பாதுகாப்பு தொடர்பாக புதிய கேள்விகளை எழுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் நடப்பவை நமது பாதுகாப்பு தொடர்பாக புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. அங்கு நடப்பவற்றை நமது அரசு கண்காணித்து வருகிறது. தேச விரோத சக்திகள், ஆப்கான் சூழ்நிலையை பயன்படுத்தி எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கக்கூடாது என நமது அரசு விரும்புகிறது. நமக்கு மேலும் சில கவலைகள் உள்ளன. அவை தேச பாதுகாப்பிற்கு சவாலாக மாறக்கூடும். மத்தியில் உள்ள மோடி தலைமையிலான அரசு எச்சரிக்கையாக உள்ளது. அரசால் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க முடியும்" என கூறியுள்ளார்.