நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில், சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய தொகுதிகளில் எம்.எல்.ஏக்களாக பதவி வகித்த மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி, பா.ஜ.கவின் பசவராஜ் பொம்மை மற்றும் காங்கிரஸின் இ.துக்காராம் ஆகியோர் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், சென்னபட்டணா தொகுதியில் எம்.எல்.ஏவாக பதவி வகித்து வந்த ஹெச்.ட.குமாரசாமி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். அதன் பிறகு, அந்த மூன்று தொகுதிகளை காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலோடு, கர்நாடகாவில் காலியானதாக அறிவிக்கப்பட்ட 3 தொகுதிகளில் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் (25-10-24) முடிவடையும் நிலையில், பா.ஜ.க உறுப்பினர் ஒருவருக்கு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த மறுநாளே இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள், இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கிறது. அதன்படி, சென்னபட்டணா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மற்ற 2 தொகுதிகளை பா.ஜ.கவும் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதற்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இந்த சூழ்நிலையில், சென்னபட்டணா தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என்று பா.ஜ.க மூத்த தலைவராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்த யோகேஷ்வர் விருப்பம் தெரிவித்தார். ஆனால், பா.ஜ.க ஏற்க மறுத்துவிட்டது.
இதனால், கடும் அதிருப்தியடைந்த யோகேஷ்வர், பா.ஜ.கவின் மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததுடன், பா.ஜ.கவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து திடீர் திருப்பமாக யோகேஷ்வர், நேற்று (23-10-24) கர்நாடகா முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோரை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில், சென்னபட்டணா தொகுதியின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக யோகேஷ்வர் அறிவிக்கப்பட்டுள்ளார்.