மாட்டிறைச்சி விற்பனைக்கு எதிராக வி.எச்.பி. அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திரிபுரா மாநிலத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. அங்கு பா.ஜ.க. தலைமையிலான அரசு ஆட்சியில் அமருவதற்கு முன்பாகவே மாநிலம் முழுவதும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டனர் பா.ஜ.க.வினர். இந்நிலையில், திரிபுரா மாநிலம் வங்காளதேச எல்லையில் உள்ள ஜோய்நகர் பகுதியில் விஸ்வ இந்து பரிஷித் மற்றும் பஜிரங்தள் அமைப்பைச் சேர்ந்த சிலர் மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை கோரி முழக்கமிட்டனர். மேலும், மாட்டிறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்காமல் விட்டால், மாபெரும் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என அவர்கள் எச்சரித்தனர்.
அவர்களில் சிலர் சிபிஎம் ஆட்சிக்காலத்தில் வங்காளதேசம் மாநிலத்தில் இருந்து வந்த சிலர்தான் மாட்டிறைச்சி விற்பனையில் ஈடுபடுகிறார்கள் என்று குற்றம்சாட்டினர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் கூட்டத்தைக் கலைத்தனர்.
திரிபுரா மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் சுனில் தியோதர், ‘வடகிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் பெரும்பாலான பொதுமக்கள் மாட்டிறைச்சி உண்கிறார்கள். எனவே, இங்கு மாட்டிறைச்சிக்கு தடை என்பது நடைமுறைக்கு வராது’ எனக் கூறியிருந்தார். மேலும், கடந்த ஆண்டு மாட்டிறைச்சி விற்க மத்திய அரசு தடைவிதித்தபோது, ‘இது பெரும்பாலான மக்களின் உணர்வுகளுக்கு எதிரான நடவடிக்கை’ எனக்கூறி மாணிக் சர்க்கார் அரசு எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.