இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ எனும் பெயரில் இந்தியா முழுவதும் நடைப்பயணம் நடத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைப்பயணத்தை கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது தெலுங்கானா மாநிலத்தில் ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார்.
இந்த நடைப்பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாரத் ஜோடோ என்கிற சமூக வலைதள கணக்கு உருவாக்கப்பட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பாக தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. மேலும் அந்த வீடியோக்களில் சில திரைப்பட பாடல்களை பின்னணியில் சேர்த்து எடிட் செய்தும் வெளியிட்டு வருகிறார்கள். அதில் ஒரு வீடியோவில் ராக்கி பாய் கதாபாத்திரத்தில் யஷ் நடித்து பிரபலமான 'கே.ஜி.எஃப் 2' படத்தின் பாடலைப் பயன்படுத்தியிருந்தனர். ஆனால் இந்த பாடலின் காப்புரிமையை பெங்களூருவைச் சேர்ந்த எம்.ஆர்.டி என்ற நிறுவனம் வைத்துள்ளதால், எங்களிடம் அனுமதி பெறாமல் பாரத் ஜோடோ யாத்ரா வீடியோவில் கே.ஜி.எஃப் பட பாடலைப் பயன்படுத்தியதாக ராகுல் காந்தி உள்ளிட்ட சிலர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், கே.ஜி.எஃப் 2 படப் பாடலுக்கான காப்புரிமை பெற்ற நிறுவனத்திடம் இருந்து உரிய அனுமதி பெறாமல், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா வீடியோவில் பாடலைப் பயன்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்ராவின் ட்விட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்க உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸின் பாரத் ஜோடோ ட்விட்டர் கணக்கு முடக்கப்படுமா அல்லது காங்கிரஸ் மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.