புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன், வெண்டிலேட்டர்கள், ரெம்டெசிவர் மருந்துகள், தடுப்பூசி இருப்பு மற்றும், தேவை குறித்த விவரங்களையும் விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய அம்மாநில தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி அரசு கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டதாகக் கூறி, கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வரை புதுச்சேரியில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரியும் புதுச்சேரி மக்கள் உரிமை கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புதுவையில் ஆக்சிஜன், வெண்டிலேட்டர் பற்றாக்குறை நிலவுவதாகப் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன், வெண்டிலேட்டர்கள், ரெம்டெசிவர் மருந்துகள், தடுப்பூசி இருப்பு குறித்த விவரங்களையும், தேவை குறித்த விவரங்களையும் விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய அம்மாநில தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 26ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மேலும், அந்த அறிக்கையில் கரோனா தடுப்பு அறிவிப்புகள் குறித்தும், வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.