வீட்டில் இருந்த ட்ரங்க் பெட்டிக்குள் மூன்று சிறுமிகள் இறந்த நிலையில் கிடந்த சம்பவத்தில் பெற்றோர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பஞ்சாப்பில் நிகழ்ந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள கான்பூர் எனும் கிராமத்தில் வசித்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளி சுஷில் மண்டலின் மகள்கள் அமிர்தா குமாரி (9), சாக்ஷி (7) மற்றும் காஞ்சன் (4). இவர்கள் மூன்று பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போய்விட்டனர்.
குழந்தைகள் காணாமல் போனது குறித்து நேற்று மாலை வரை சிறுமியின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. காணாமல் போன குழந்தைகளைப் பற்றி சுஷில் மண்டல் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் உரிமையாளர் சுரீந்தர் சிங் என்பவர் காவல்துறை ஹெல்ப் லைன் எண்ணான 112க்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மக்சூதன் காவல் நிலைய போலீசார் இரவு 11 மணியளவில் தேடுதலை தொடங்கினர்.
ஆனால் குழந்தைகள் காணாமல் போனது குறித்து பெற்றோர் எந்த பதற்றமும் அடையவில்லை. குழந்தைகளின் தந்தை மது போதையில் இருந்துள்ளார். இதனால் போலீசாரின் சந்தேகம் சிறுமிகளின் பெற்றோர் மீது திரும்பியது. பின்னர் வீட்டில் நடத்தப்பட்ட தேடுதலில் வீட்டில் இருந்த பெரிய ட்ரங்க் பெட்டி ஒன்றில் மூன்று சிறுமிகளும் கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
பெற்றோர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தைகளுக்கு சரியாக உணவளிக்க முடியாததால், வறுமை காரணமாக தங்கள் மகள்களை கொன்றதாக சிறுமிகளின் தாயே பின்னர் ஒப்புக்கொண்டார். ஞாயிற்றுக்கிழமை காலை மகள்களுக்கு கொடுத்த பாலில் பயிர்களுக்கு தெளிக்கப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை சேர்த்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். மீட்கப்பட்ட சிறுமிகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் பரிசோதனை அறிக்கை கைக்கு வந்தால் உறுதியான தகவல்கள் கிடைக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.