டெல்லி சாணக்யபுரியில் உள்ள 'தமிழ்நாடு' இல்லத்தில், உளவுத்துறை அதிகாரிகள் எனக் கூறிக்கொண்ட சிலர் தன்னை மிரட்டியதாக தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகனும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இன்று (22.09.2020) கூடிய நாடாளுமன்றத்தில், மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் சாபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் ஒன்றை தெரிவித்தார். அதில், "நான் தங்கியிருக்கும் தமிழ்நாடு இல்லத்தின் அறைக்குள், அத்துமீறி அடையாளம் தெரியாத சில நபர்கள் நுழைந்தனர். அவர்கள் தங்களை உளவுத்துறையினர் எனக் கூறிக் கொண்டு, நாடாளுமன்றக் கூட்டத்தில் தி.மு.க எழுப்பப் போகும் விவாதம் மற்றும் பல்வேறு பிரச்சனைகளில் கட்சியின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பினர். மேலும், தமிழக அரசியல் நிலவரம் என்ன, நாடாளுமன்ற நேரத்தில் என்ன விவகாரங்களைப் பேசப் போகீறீர்கள் என மிரட்டும் தொனியில் கேட்டதாக கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இவரின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து காங்கிரசும், தங்களிடம் போலீசார் அத்துமீறி நடப்பதாகப் புகார் கூறியது. இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, பாதிக்கப்பட்டவர்களை எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்கக் கேட்டுக் கொண்டார். அப்போது எழுந்த தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, இது அவமானகரமான விஷயம் என்று பேசினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், ஒவ்வொரு உறுப்பினரின் பாதுகாப்பையும் உறுதிசெய்வது சபாநாயகரின் கடமை எனக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த முதல்வர், "அவர்களை யாராவது மிரட்ட முடியுமா. அதுவும், துரைமுருகனின் மகனை யாராவது மிரட்ட முடியுமா? அவர்கள் மிரட்டலுக்குப் பயப்படுவார்கள் எனச் சொன்னால் யாராவது நம்புவார்களா? தி.மு.க.வின் சாதாரணத் தொண்டனைக் கூட யாரும் மிரட்ட முடியாது." என்றார்.