உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக இருந்து வந்தவர் திரிவேந்திர சிங் ராவத். அம்மாநில பாஜகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் அண்மையில் முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் பாஜகவில் தொடர்ந்து இருந்து வருகிறார். மேலும் மாநிலத்தின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்து ஒன்று விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. திரிவேந்திர சிங் ராவத் தனது பேட்டியில், "ஒரு தத்துவார்த்த ரீதியில் பார்த்தால் கரோனா வைரஸ் ஒரு உயிரினமாகும். நம்மை போலவே அதற்கும் வாழ்வதற்கான உரிமை உண்டு. ஆனால் நாம் (மனிதர்கள்) நம்மை மிகவும் புத்திசாலிகள் என்று நினைத்துக்கொண்டு, அதை அழிக்க முயற்சிக்கிறோம். எனவே அது தொடர்ந்து தன்னை உருமாற்றிக் கொள்கிறது" என கூறியுள்ளார்.
இது பெரும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. அம்மாநில எதிர்க்கட்சி தலைவர்கள் திரிவேந்திர சிங் ராவத்தின் கருத்தை முட்டாள்தனமானது என கடுமையாக சாடி வருகின்றனர். சமூகவலைதளங்களிலும் திரிவேந்திர சிங் ராவத் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.