இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. அதேசமயம் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அந்தவகையில், மாடர்னா தடுப்பூசிக்கு இன்று இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால், கரோனா தடுப்பூசி தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
மாடர்னா தடுப்பூசி குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய டாக்டர் வி.கே. பால், இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல் சர்வதேச தடுப்பூசியான மாடர்னா, இரண்டு டோஸ்களாக செலுத்தப்படும் எனத் தெரிவித்தார். கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் வி மற்றும் மாடர்னா ஆகிய நான்கு தடுப்பூசிகளும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பாதுகாப்பானது எனக் கூறிய டாக்டர் வி.கே. பால், தடுப்பூசிக்கும் மலட்டுத்தன்மைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், ஃபைசர் நிறுவனத்துடனான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனவும் கூறினார். மேலும், கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது குறித்த கேள்விக்கு பதிலளித்த டாக்டர் வி.கே. பால், "கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும். கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி பாதுகாப்பானது. அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக சுகாதார அமைச்சகம் மேலும் ஆய்வு செய்து வருகிறது" எனக் கூறியுள்ளார்.