இந்தியாவில் கரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையால் கரோனா பரவல் குறித்து கணித்து, அதுதொடர்பாக ஆலோசனைகளை அளிக்க அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினரான ஐஐடி கான்பூர் பேராசிரியர் மணிந்திர அகர்வால், இந்தியாவில் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கரோனா அலை உச்சத்தை தொடும் என தங்களது கணிதமுறைப்படியிலான கணிப்புகள் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
இந்தியாவில் கரோனா அலை உச்சத்தை தொடும்போது, தினசரி 4 முதல் 8 லட்சம் பேருக்கு கரோனா உறுதியாகலாம் என கூறியுள்ளதோடு, கரோனா அலை உச்சத்தை தொடுகையில் மும்பையில் தினசரி 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை கரோனா பாதிப்புகள் உறுதியாகலாம் என மணிந்திர அகர்வால் தெரிவித்துள்ளார். அதேபோல் டெல்லியில் 35 ஆயிரத்திலிருந்து 70 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதியாகலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கரோனா அலை உச்சத்தில் இருக்கையில் மருத்துவமனை படுக்கைகள் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சம் வரை அதிகரிக்கலாம் எனவும் கூறியுள்ள மணிந்திர அகர்வால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்பதால், இந்த மூன்றாவது அலை கையாளக்கூடியதாக இருக்கும் எனவும் மணிந்திர அகர்வால் தெரிவித்துள்ளார்.