இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் தற்போது கரோனாவின் இரண்டாவது அலை ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள், பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன.
இந்தநிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 81, 466 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு, ஒரேநாளில் பதிவான அதிகபட்ச கரோனா பாதிப்பு எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் (இன்று காலை 8 மணிவரை) 469 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த டிசம்பர் மாதத்திற்குப் பிறகு ஒரேநாளில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
மேலும், மஹாராஷ்ட்ரா, சத்தீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது என தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கடந்த 24 மணி நேரத்தில் கரோனவால் பாதிக்கப்பட்ட 84.61 சதவீதம் பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளது.