உலகம் முழுவதும் பரவிய கரோனா வைரஸ் லட்சக்கணக்கான உயிர்ப்பலிகளை வாங்கியது. அதன் பிறகு தடுப்பூசி, ஊரடங்கு, தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை மூலம் கட்டுப்பாட்டிற்குள் வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் அதன் புதிய அலையைத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்தவகையில், மாநில அரசுகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ள மத்திய அரசு, ‘சீனா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்று பரவல் குறித்த அச்சம் மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையில், கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை வல்லுநர்கள் பங்கு பெற்றனர். சீனா மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் 'டிஎப்7' என்ற உருமாறிய புதுவகை கரோனா பாதிப்பு அதிகரித்திருக்கும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சீனாவில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்த உருமாறிய கரோனா தொற்றினால் 420க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் எதிரொலியாக இந்தியாவில் இதுவரை புதிய வகை கரோனா 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத்தில் மூன்று பேருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் இந்த புதிய வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், கரோனா பரவல் தடுப்பு தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.