இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 632 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 986 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார். இன்று மாலை 4.30 மணி அளவில் நடைபெறும் ஆலோசனையில் மூத்த அமைச்சர்கள்,அதிகாரிகள் கலந்து கொள்ள இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற ஊழியர்கள் 1,409 பேருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் 402 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சில நாட்களுக்கு முன்பு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பவார் உள்ளிட்ட சில இணையமைச்சர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.