அசாம் மாநிலத்தில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் அவ்வப்போது, இஸ்லாமியர்கள் அவதூறாகவும், கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் அதிக பெரும்பான்மை மக்களாக இஸ்லாமிய மக்கள் இருக்கிறார்கள் என்று கூறியது சர்ச்சையாக மாறியுள்ளது.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, “2041-க்குள் அசாம், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலமாக மாறும். இது நிஜம், யாராலும் தடுக்க முடியாது. மாநிலத்தில் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் இஸ்லாமிய மக்கள் தொகை சுமார் 30 சதவீதம் அதிகரித்து வருகிறது. புள்ளிவிவர மாதிரியின்படி அசாமின் மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் இப்போது 40 சதவீதமாகிவிட்டனர். எனது அரசாங்கம் இஸ்லாமியர்கள் மத்தியில் மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆனால், ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் இந்து சமூகத்தின் மக்கள்தொகை சுமார் 16 சதவீதம் அதிகரித்து வருகிறது. இஸ்லாமியர்களின் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் காங்கிரஸுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. ராகுல் காந்தி மக்கள் தொகைக் கட்டுப்பாட்டின் பிராண்ட் அம்பாசிடராக மாறினால், அவர் சொல்வதை மட்டுமே கேட்கும் சமூகத்தினரை அது கட்டுப்படுத்தும். மாநிலத்தின் மக்கள்தொகையில் ஏற்பட்ட மாற்றம் ஒரு பெரிய பிரச்சினை. நாம் பல மாவட்டங்களை இழந்துள்ளோம். இது எனக்கு அரசியல் பிரச்சினை அல்ல. இது எனக்கு வாழ்வா? சாவா? பிரச்சனை” எனப் பேசினார். இஸ்லாமியர்களின் மக்கள் தொகை குறித்து பா.ஜ.க முதல்வர் பேசியிருப்பது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.