உன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ளவர் எம்.எல்.ஏ. குல்தீப் செங்கார். இந்தக் குற்றத்திற்காக சமீபத்தில் அவர் சார்ந்த கட்சியான பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், எம்.எல்.ஏ. குல்தீப் செங்கார் இடம்பெற்றிருக்கும் ஒரு போஸ்டர் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் படங்கள் அதில் இருப்பதும், சுதந்திர தின வாழ்த்துச் செய்திக்காக பாஜகவைச் சேர்ந்த ஒருவரே இந்த விளம்பரத்தை வெளியிட்டதும்தான், சர்ச்சைக்குக் காரணம்.
உள்ளூர் செய்தித்தாள் ஒன்றில், உங்கு நகர் பஞ்சாயத்து சேர்மனும், பாஜகவைச் சேர்ந்தவருமான அனுஜ்குமார் தீக்சித் என்பவர்தான், இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளார். அனுஜ்குமாரை பாஜகவில் சேர்த்துவிட்டதே, பாலியல் வழக்கில் சிக்கியுள்ள குல்தீப் செங்கார்தான் என்கிறார்கள்.
இந்த விளம்பரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதுதொடர்பாக அனுஜ்குமாரிடம் விளக்கம் கேட்டபோது, தொகுதி எம்.எல்.ஏ. என்பதால் குல்தீப் செங்காரின் படத்தைப் பயன்படுத்தியதாக மழுப்பலாக பதிலளித்துள்ளார்.
இதுபற்றி விளக்கமளித்துள்ள பாஜக செய்தித்தொடர்பாளர் ஷலப்மாணி திரிபாதி, “இது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இதில் அரசையோ, கட்சியையோ சம்பந்தப்படுத்தத் தேவையில்லை. உன்னாவ் விவகாரத்தில் அரசும், கட்சியும் என்ன செய்யவேண்டுமோ, செய்துவிட்டது. செங்கார் மீது எந்த இரக்கமும் கிடையாது” என்றுள்ளார்.
2017-ஆம் ஆண்டு உன்னாவ் தொகுதி எம்.எல்.ஏ. குல்தீப் செங்கார் தனது வீட்டில் வைத்து, 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தார். இதுதொடர்பாக புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால், முதல்வர் யோகியின் வீட்டு முன்பு குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார் அந்தச் சிறுமி. அப்போது கைது செய்யப்பட்ட அவரின் தந்தை, காவல்நிலையத்தில் மர்மமான முறையில் இறந்து போனார்.
தொடர்ந்து வழக்கை நடத்தவிடாமல் மிரட்டல் வருவதாக சிறுமி தரப்பில் சொல்லப்பட்ட நிலையில், நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் சிறுமியின் கார் விபத்தில் சிக்கியது. இதில் அவரது தாய், உறவினர் உயிரிழந்தனர். வழக்கறிஞரும், சிறுமியும் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குல்தீப் செங்கார் மீது சிபிஐ வழக்குப்பதிந்து விசாரித்து வரும் நிலையில், இந்த போஸ்டர் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.