Skip to main content

ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்; நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதி நிலவரம்!

Published on 08/10/2024 | Edited on 08/10/2024
Constituency status  on Haryana, Jammu and Kashmir assembly elections

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே போன்று ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 5ஆம் தேதி  ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஹரியானா சட்டமன்றத்திற்கு கடந்த 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 67.90% வாக்குகள் பதிவானது. அதே போல், ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளில் 3 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் 63.88% வாக்குகள் பதிவானது. 

ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் அம்மாநிலத்தில், பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் அம்மாநிலத்தில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதே போன்று, ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தற்போது அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் ஹரியானாவில் 2 முறை தொடர்ந்து ஆட்சி அமைத்த பா.ஜ.க, பெரும்பான்மைக்கு அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி, ஆட்சியமைக்கு தேவையான பெரும்பான்மை இடங்களை கடந்து முன்னிலை வகித்து வருகிறது. 

இந்த சட்டமன்றத் தேர்தல்களில், போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதி நிலவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானா மாநிலத்தை பொறுத்தவரை, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், காங்கிரஸ் சார்பில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டார். காலை முதலே முன்னிலை வகித்த வினேஷ் போகத்தை, பா.ஜ.க வேட்பாளர் யோகேஷ் குமார் தொடர்ந்து பின்னுக்கு தள்ளி வருகிறார். லட்வா தொகுதியில் போட்டியிட்ட ஹரியானா மாநில முதல்வரான நயாப் சிங் சைனி, காங்கிரஸ் வேட்பாளரை பின்னுக்கு தள்ளி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 

ஜம்மி காஷ்மீரை பொறுத்தவரை, காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரான மெகபூபா முப்தியின் மகளான இல்திஜா முப்தி, பிஜ்பெஹாரா தொகுதியில் போட்டியிட்டார். அவரை,  4,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளி ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் ஹஸ்னைன் மசோடி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். பட்காம் மற்றும் காந்தர்பால் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரான உமர் அப்துல்லா, இரு தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 

சார்ந்த செய்திகள்