ரயில் நிலையம் ஒன்றில் நின்று கொண்டிருந்த டி.டி.ஆர். மீது திடீரென மின்சாரம் பாய்ந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் மேதினி பூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள காரக்பூர் ரயில் நிலையத்தில் கடந்த 7ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் ரயில் நிலையத்தில் இருக்கும் பயணிகளிடம் அங்கிருந்த இரு டி.டி,ஆர்.கள் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பரிசோதனை முடிந்த பின்பு அடுத்த ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்த டி.டி.ஆர்கள் பிளாட்பாரத்தில் ஒன்றாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, யாரும் எதிர்பாராத வேளையில், இரும்பு பாதைக்கு அருகே நின்று கொண்டிருந்த சுஜன் சிங் சர்தார் என்ற டி.டி.ஆர். மீது, உயர் மின் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது. மின்சாரம் தாக்கிய டி.டி.ஆர். நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்த ரயில் பயணிகளும், ஊழியர்களும், அதிர்ச்சியடைந்தனர். பலத்த தீக்காயம் அடைந்த டி.டி.ஆரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து, கோரக்பூர் ரயில்வே தலைமை அதிகாரி கூறும்போது ''இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். அறுந்து விழுந்த மின்சார வயர் டி.டி.ஆர்.க்கு பலத்த காயத்தை ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக அவர் உயிர் பிழைத்துள்ளார். அவர் நலமாக உள்ளார்'' எனத் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.