உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது.
ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காக்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மாநில கட்சிகளை சேர்த்து பாஜக என்.டி.ஏ கூட்டணியையும், எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து காங்கிரஸ் இந்தியா கூட்டணியையும் அமைத்து வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரச்சாரம் என்று சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர். பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளையும், காங்கிரஸ் கட்சி பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.
இந்த நிலையில், டைனோசர் போன்று காங்கிரஸ் கட்சியும் இன்னும் சில காலங்களில் அழிந்துவிடும் என்று பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தராகாண்டில் கவுச்சார் நகரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவர் பின் ஒருவராக விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் தினமும் சண்டைபோட்டு கொள்கின்றனர். டைனோசர் போன்று இன்னும் சில ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி அழிந்துவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் காங்கிரஸ் என்ற பெயரை கூறினால், குழந்தைகள் யார் அவர்கள்? என்று கேட்பார்கள் எனக் கடுமையாக சாடியிருக்கிறார்.