இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து தற்போது வரை முழுவதுமாக நடைபெறவில்லை. நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகள் சார்பில், மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அவைகள் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே எதிர்க்கட்சிகள் அனைவரும் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் இன்றும் நாளையும் விவாதிக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள்(10.8.2023) பிரதமர் மோடி விளக்கமளிக்கவுள்ளார்.
இந்த நிலையில், தற்போது மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விவாதத்தை காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் தொடங்கி பேசினார். அதில், “நாங்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இது வெறும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் எண்களைப் பற்றியது அல்ல, மணிப்பூருக்கான நீதியைப் பற்றியது. அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை என்பதனை இந்தச் சபை முன்னே வைக்கிறோம். மணீப்பூருக்காக இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். மணீப்பூருக்கு நீதி வேண்டும்.
மணிப்பூரில் பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசு தோல்வியடைந்துள்ளது என்பதை பிரதமர் மோடி ஏற்றுக்கொள்ள வேண்டும். மணிப்பூரில் சுமார் 5000 வீடுகள் எரிக்கப்பட்டு, 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 60,000 பேர்கள் முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பாக 6,500 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் அமைதி, நல்லிணக்கம் போன்றவற்றை உருவாக்க வேண்டிய முதல்வர், இரண்டு மூன்று நாட்களாய் சமூகத்தில் பதற்றத்தைத் தூண்டும் வகையில் நடந்து கொண்டார். ஆனால் இதைப்பற்றியெல்லாம் நாடாளுமன்றத்தில் பிரதமர் பேசாமல் 'மௌன விரதம்' மேற்கொண்டார். எனவே, அவரது மௌனத்தைக் கலைக்க நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டியதாயிற்று. அவரிடம் கேட்க எங்களுக்கு மூன்று கேள்விகள் உள்ளன. 1.மணிப்பூருக்கு அவர் ஏன் இன்றுவரை செல்லவில்லை?, 2.மணிப்பூரைப் பற்றிப் பேசுவதற்கு கிட்டத்தட்ட 80 நாட்கள் ஆனது ஏன், அவர் பேசியது வெறும் 30 வினாடிகள் ஏன்?, 3. மணிப்பூர் முதல்வரைப் பிரதமர் ஏன் இதுவரை பதவி நீக்கம் செய்யவில்லை?
இந்த சம்பவங்கள் வடகிழக்கு மாநிலத்தின் ஒரு மூளையில் நடைபெறவில்லை. இவை இந்தியாவில் நடக்கின்றன. மணிப்பூர் எரிகிறது என்றால், ஒட்டுமொத்த இந்தியாவும் எரிகிறது எனப் பொருள். குஜராத், உத்தரகாண்ட் மற்றும் திரிபுரா மாநில முதல்வர்களை மாற்றும்போது ஏன் மணிப்பூர் முதல்வரை பிரதமர் மாற்றவில்லை. மணிப்பூரில் இரண்டு சமூகங்களுக்கு இடையே பிரிவு இல்லை. உங்கள் அரசியல் அந்த மாநிலத்தில் இரு பிரிவுகளை உருவாக்கியுள்ளது. மணிப்பூர் குறித்து பிரதமர் அவையில் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் தெளிவாக உள்ளன. ஆனால், பிரதமர் மௌனத்தைத் தேர்வு செய்துள்ளார்” என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பி விமர்சனம் செய்துள்ளார்.