கர்நாடகாவில் மே மாதம் 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தற்போது அங்கு ஆட்சியிலிருக்கும் பாஜகவும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. மறுபுறம் கருத்துக்கணிப்பு தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 140 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி ஆட்சியமைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கன்னட டிஜிட்டல் ஊடகமான ஈதினா டாட் காம் நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் வெல்லும் என தெரியவந்துள்ளது.
பிரபல தேர்தல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ் உடன் இணைந்து கர்நாடக தேர்தல் கருத்துக் கணிப்பை ஈதினா டாட் காம் நடத்தியுள்ளது. தற்போது வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின்படி, கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 134 தொகுதிகளிலிருந்து 140 தொகுதிகள் வரை காங்கிரஸ் கைப்பற்றும் என்றும் பாஜகவிற்கு 57-ல் இருந்து 65 இடங்கள் வரை கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 104 தொகுதிகளில் வென்ற பாஜகவுக்கு தற்போது பெரும் சரிவு ஏற்படும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு 43 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனவும் காங்கிரசைவிட 10 சதவீதம் குறைவாக 33 சதவீத வாக்குகளை பாஜக பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடக தலைநகரான ஹைதராபாத் கர்நாடக பிராந்தியத்தில் காங்கிரஸுக்கு 31-ல் இருந்து 37 தொகுதிகள் வரை கிடைக்கும் எனவும், ஹைதராபாத் கர்நாடக பிராந்தியத்தில் பாஜகவுக்கு இரண்டிலிருந்து நான்கு தொகுதிகள் வரை கிடைக்கும் எனவும், மும்பை கர்நாடகா பிராந்தியத்தில் காங்கிரசுக்கு 40-லிருந்து 46 இடங்கள் கிடைக்கும் என்றும், தெற்கு கன்னடத்தில் காங்கிரசுக்கு 26 முதல் 32 தொகுதி வரையும், பெங்களூருவில் 16-லிருந்து 20 தொகுதி வரையும் கிடைக்கும் எனவும், கர்நாடகத்தின் மத்திய கர்நாடகா பிராந்தியத்தில் காங்கிரஸ்க்கும் மூன்றிலிருந்து நான்கு தொகுதிகளும், பாஜக 19 லிருந்து 23 தொகுதிகளும் கைப்பற்ற வாய்ப்புள்ளது என்றும், கடலோர கர்நாடகத்தில் பாஜகவிற்கு 10 லிருந்து 14 தொகுதிகள் வரையும், காங்கிரசிற்கு ஐந்திலிருந்து ஒன்பது தொகுதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.