காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் தற்போதிலிருந்தே அங்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் காங்கிரஸும், ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
இதனையொட்டி பாஜக சார்பில் பழங்குடியினர் அதிகமாக வாழும் காங்கர் மாவட்டத்தில் நேற்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், “எங்களுக்கு யாரும் தீங்கு செய்ய நினைத்தால், தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எங்கள் அண்டை நாடுகளுக்குச் சொல்ல விரும்புகிறேன். பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியா வலுவான நாடாக உருவாகி இருக்கிறது. இனியும் பலவீனமாக இருக்கப்போவது இல்லை. கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு மேற்கொண்ட வலிமையான நடவடிக்கைகளால் இடதுசாரி பயங்கரவாதம் வீழ்த்தப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது. எங்களுக்குக் காங்கிரஸ் கட்சி ஒத்துழைப்பு கொடுத்தால் அவர்களின் ஆதிக்கத்தை அடியோடு ஒழித்துவிடுவோம். சத்தீஸ்கர் மாநிலத்தில் கட்டாயம் மதமாற்றம் அதிகரித்து வருகிறது. அதிலும், பஸ்தாரில் கட்டாயம் மதமாற்றம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி முற்றுப்புள்ளி வேண்டும். நாடு விடுதலை பெற்ற பின்பு காங்கிரஸ் தனக்கும், தனது அரசியலுக்காகவும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்ததே தவிரப் பழங்குடியின மக்களை கண்டுகொள்ளவே இல்லை” என்றார்.