இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றத்தில், மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் கர்நாடகா மாநிலத்திறுகு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றும், வறட்சி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டினர். அந்த வகையில், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கர்நாடகா நாடாளுமன்ற எம்.பி டி.கே.சுரேஷ், “தென் மாநிலங்களிடம் இருந்து வரியைப் பெற்றுக்கொண்டு வடமாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இதே நிலை தொடரும் என்றால், தனி நாடு கேட்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம்” என்று கூறினார். அது அப்போது பெரும் விவாதப் பொருளாக மாறியது.
இதனையடுத்து, கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா நேற்று (06-02-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “வரி விநியோகத்தில் கர்நாடகா மாநிலத்துக்கு மத்திய அரசு அநீதி இழைத்துள்ளது. அதிக வரியை கொடுக்கும் கர்நாடகா மாநிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், குறைவாக வரியை வழங்கும் வடமாநிலங்களுக்கு நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. வட மாநிலங்களை ஒப்பிடும் போது, மத்திய அரசு தென் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. முக்கியமாக கர்நாடகாவை எதிரி மாநிலமாக மத்திய அரசு நினைக்கிறது. மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் எனது தலைமையில், போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
இந்த நிலையில், டெல்லியில் முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று (07-02-24) போராட்டம் நடக்கவுள்ளது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள கர்நாடகா காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள வருகை தந்துள்ளனர். மேலும், இப்போராட்டத்தை பா.ஜ.க, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் புறக்கணித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.