Skip to main content

சட்டப்பேரவையில் உறங்கி, போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!

Published on 18/02/2022 | Edited on 18/02/2022

 

congress mla

 

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் தொடர்பான போராட்டத்தின் போது, ஒரு அரசு கல்லூரியில் தேசிய கோடி ஏற்றப்பட்ட இடத்தில் காவிக்கொடி ஏற்றப்பட்டது. இது தொடர்பாக பெரும் சர்ச்சை வெடித்தநிலையில், அம்மாநிலத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, காவிக்கொடி ஒருநாள் தேசியக் கொடியாக மாறலாம் எனத் தெரிவித்தார்.

 

இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், நேற்று கர்நாடக மாநில காங்கிரஸார் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரி, அம்மாநில சட்டமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர். மேலும் தேசியக் கொடியை ஏந்தி ஈஸ்வரப்பா பதவி விலக வேண்டும் என போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

 

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ”செங்கோட்டையில் காவிக்கொடி உடனே ஏற்றப்படும் என அவர் கூறவில்லை. இன்னும் 300 அல்லது 500 வருடங்களில் அது நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம் என்றுதான் அவர் தெரிவித்தார். நாங்கள் தேசிய கோடியை ஏற்றுக்கொண்டோம் எனவும், அதை யாரும் அவமதிக்கக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.காங்கிரஸார் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். சட்டப்படி ஈஸ்வரப்பா எந்த தவறும் செய்யவில்லை, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

 

இதற்கிடையே சட்டசபை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும், கே.எஸ்.ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதனைத் தொடந்து முதல்வர் பசவராஜ் பொம்மை, சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி, முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவரான சித்தராமையாவை சட்டசபை வளாகத்தில் சந்தித்து, போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள்ளேயே உறங்கி போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்