மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாபா சித்திக் எம்.எல்.ஏவாக பொறுப்பு வகித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை தலைவராக பொறுப்பு வகித்து வந்த இவர் சமீபத்தில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பாபா சித்திக்கின் மகன் ஜீஷன் சித்திக், காங்கிரஸ் சார்பாக எம்.எல்.ஏவாக பதவி வகித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், இவர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மும்பை காங்கிரஸ் இளைஞரணித் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில், அவரை, கட்சித் தலைமை, மும்பை காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஜீஷன் சித்தன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “ராகுல் காந்தி ஒரு நல்ல தலைவர். அவர் வேலையை சரியாக செய்கிறார். மல்லிகார்ஜுன கார்கே எனக்கு தந்தை போன்றவர். கார்கே கட்சியின் மூத்த தலைவர். ஆனால், சில நேரங்களில் மல்லிகார்ஜுன கார்கேவின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. ராகுல் காந்தியை சுற்றியுள்ள நபர்கள் கட்சியை அழிக்கின்றனர். ராகுல் காந்தியை சந்திக்க பல்வேறு இடையூறுகளைச் சந்தித்தேன்.
ராகுல் காந்தியின், இந்திய ஒற்றுமை யாத்திரை மகாராஷ்டிரா மாநிலம் வந்த போது அவரை சந்திக்க விரும்பினேன். ஆனால், ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர்கள், நான் 10 கிலோ எடையைக் குறைத்தால்தான் ராகுல் காந்தியைச் சந்திக்க முடியும் என்று கூறிவிட்டார்கள். ராகுல் காந்தி தனது வேலையை நன்றாக செய்கிறார். ஆனாலும் அவரது அணி மிகவும் முரட்டுத்தனமாக இருப்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. கடந்த வாரம் வரை காங்கிரஸுடனேயே இருப்பேன் என்று கூறினேன். ஆனால், காங்கிரஸ் நடந்துகொள்ளும் விதமும், நடந்துகொண்டிருக்கும் விதமும் தெளிவாகத் தெரிகிறது.
சிறுபான்மையினருடன் இருப்பதாக காங்கிரஸ் கூறுகிறது. ஆனால் மும்பை காங்கிரஸின் தலைவராக, இதுவரை எந்த இஸ்லாமிய தலைவரும் இருந்ததில்லை. முஸ்லிம்களை பாதுகாப்பதாக காங்கிரஸ் கூறுகிறது. ஆனால், காங்கிரஸிலும், இளைஞர் காங்கிரஸிலும் தலைதூக்கும் வகுப்புவாதம் வேறு எங்கும் காணப்படவில்லை. காங்கிரஸுக்கு சிறுபான்மையினர் தேவையில்லை, நாங்கள் தேவையில்லை என்று தெரிகிறது. நான் இப்போது எனது விருப்பங்களைச் சரிபார்க்க வேண்டும். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது