ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே போன்று ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 5ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஹரியானா சட்டமன்றத்திற்கு கடந்த 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 67.90% வாக்குகள் பதிவானது. அதே போல், ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளில் 3 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் 63.88% வாக்குகள் பதிவானது.
ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் அம்மாநிலத்தில், பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் அம்மாநிலத்தில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதே போன்று, ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தற்போது அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரு இடங்களிலும் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இது ஆரம்பக்கட்ட வாக்கு எண்ணிக்கை தான். பொறுத்திருந்து பார்ப்போம். இன்று நாள் முழுவதும் நாங்கள் லட்டு மற்றும் ஜிலேபிகளை என்று உண்போம் என்ற நம்பிக்கை உள்ளது. பிரதமர் மோடிக்கு கூட ஜிலேபியை அனுப்பி வைக்க இருக்கிறோம். ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் நாங்கள் பெரும்பான்மையோடு ஆட்சி அமைப்போம் என்று நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.
சட்டமன்றத் தேர்தல் நடந்த முடிந்த பிறகு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகின. அதில், ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு இடங்களிலும் காங்கிரஸ் அதிக இடங்களை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.