ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரின் அரசியல் தலைவர்களோடு அண்மையில் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் முதலில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்த்து வழங்க வேண்டும், அதன்பிறகே தேர்தலை நடத்த வேண்டும் என ஜம்மு காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் கோரினர்.
ஆனால் மத்திய அரசு முதலில் சட்டமன்றத் தேர்தலை நடத்த முடிவுசெய்துள்ளது. ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்காக, தொகுதிகளின் எல்லையை மறுவரையறுக்கும் பணி தொடங்கிவிட்ட நிலையில், அந்தப் பணிகளில் கலந்துகொள்ளுமாறு ஜம்மு காஷ்மீர் தலைவர்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
இருப்பினும் இதை ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், "காங்கிரஸ் மற்றும் பிற ஜம்மு காஷ்மீர் கட்சிகள் மற்றும் தலைவர்கள் முதலில் மாநில அந்தஸ்த்தும், பிறகு தேர்தலும் நடைபெற வேண்டுமென்கிறார்கள். அரசாங்கத்தின் பதிலோ முதலில் தேர்தல்கள், பின்னர் மாநில அந்தஸ்த்து என்கிறது. குதிரைதான் வண்டியை இழுக்கும். ஒரு மாநிலம்தான் தேர்தலை நடத்த வேண்டும். அத்தகைய தேர்தல்கள் மட்டுமே சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் இருக்கும். அரசாங்கம் ஏன் முன்னால் வண்டியையும் பின்னால் குதிரையையும் விரும்புகிறது? இது வினோதமானது" என கூறியிருந்தார்.
இந்தநிலையில் மீண்டும் ப. சிதம்பரம், ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இன்று (26.05.2021) மீண்டும் மத்திய அரசை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பல செய்தித்தாள்களின் தலையங்கங்கள் முதலில் மாநில அந்தஸ்து, பிறகு தேர்தல் என்ற கோரிக்கையை ஆதரித்துள்ளன. நான் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். குதிரை எது, வண்டி எது என அடையாளம் காண முடியாத ஒரு மத்திய அரசு நம்மிடம் இருப்பது நமது துரதிர்ஷ்டம். மக்கள் முழு அளவிலான மாநில அரசாங்கத்திற்கும் ஒரு அதிகாரமுள்ள முதல்வருக்கும் வாக்களிக்க விரும்புகிறார்கள். எனவே, மாநில அந்தஸ்தை மீண்டும் அளிப்பது முதல்படியாகும். குடிமக்கள் இந்தக் கோரிக்கையை அச்சு, ஆன்லைன் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் கட்டாயமாக குரல் கொடுக்க வேண்டும்" என கூறியுள்ளார்.