இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி விலை உயர்வு மற்றும் பண வீக்கத்துக்கு எதிராக டெல்லியில் மாபெரும் பேரணியை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; மோடியும் பணவீக்கமும் மக்களின் வாழ்க்கையில் சாபமாகிவிட்டனர். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் ஆகியவை நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் வருமானத்தையும், பட்ஜெட்டையும் அழித்துவிட்டது.
பாரதிய ஜனதா அரசால் உந்தப்படும் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தால் இந்திய மக்கள் தாங்க முடியாத கொடுமையையும் சொல்லொணாத் துயரத்தையும் அனுபவித்து வருகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்ச ஊட்டச்சத்துக்கு கூட பாதிப்பு ஏற்படுகிறது. மக்கள் அன்றாட உணவுப் பொருட்களையும் மற்ற நுகர்பொருட்களையும் வாங்குவதற்கும் உட்கொள்வதற்கும் சிரமப்படுகிறார்கள். இந்த தீர்க்கமுடியாத வலியையும் மற்றும் மக்களின் துன்பத்தையும் மோடி அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சனைகளில் இருந்து திசை திருப்ப மின்னணு ஊடகங்களின் ஒரு பிரிவின் ஆதரவுடன், மத ரீதியாக பிளவுபடுத்தும் பிரசங்கங்களை வழங்குவதும், திசை திருப்பும் அறிக்கைகளை வழங்குவதுமே மோடி அரசின் ஒரே தீர்வாக இருக்கிறது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் கடுமையான விலைகள், அனைத்து உணவுப் பொருட்கள் மற்றும் பிற நுகர்வுப் பொருட்களின் விலையில் சுழல் விளைவைக் கொண்டுள்ளது. சிமெண்ட், இரும்பு மற்றும் எஃகு போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை கிட்டத்தட்ட 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. எல்லாமே படிப்படியாக சாமானியர்களின் கைக்கு எட்டாமல் போய்க் கொண்டிருக்கிறது. மோடி அரசு சாதாரண இந்தியரின் துயரங்கள் மற்றும் வேதனைகள் குறித்து அலட்சியமாக உள்ளது அல்லது மற்ற சந்தர்ப்பங்களில் கேலி செய்கிறது.
காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவரும் டிசம்பர் 12 ஆம் தேதி 'மெஹங்காய் ஹடாவோ' பேரணியை நடத்துவதன் மூலம் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தின் மீது நாட்டின் கவனத்தை ஈர்க்க திட்டமிட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் இந்திய முழுவதிலும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் இந்த பேரணியில் உரையாற்றுவர். இது தற்போதுள்ள மோடி அரசுக்கு, அதன் கொள்ளையை நிறுத்திக்கொள்ளவும், விலைவாசியை குறைக்கவும் ஒரு தீர்க்கமான எச்சரிக்கையை கொடுக்கும். மோடி அரசு பின்வாங்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.