Skip to main content

மம்தாவை எதிர்ப்பதா? - 'நோ' சொன்ன காங்கிரஸ் தலைமை!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

sonia - rahul - mamata

 

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தாலும், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் சுவேந்த் அதிகாரி மம்தாவை தோல்வியடையச் செய்தார். இருப்பினும், அம்மாநில முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட மம்தா, நவம்பர் ஐந்தாம் தேதிக்குள் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

 

இந்த நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம், மேற்கு வங்கத்தின் சம்சர்கஞ்ச், ஜாங்கிபூர், பபானிபூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவித்துள்ளது. இதில் பபானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. பபானிபூர் தொகுதியிலிருந்து மம்தா ஏற்கனவே இரண்டுமுறை சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இடைத்தேர்தலில் அவர் வெல்வதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

இதற்கிடையே தேசிய அளவில் திரிணாமூல் காங்கிரஸும், காங்கிரஸ் கட்சியும் கைகோர்த்துள்ள நிலையில், இடைத்தேர்தலில் மம்தாவிற்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்துமா என கேள்வியெழுந்தது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மம்தாவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தக் கூடாது என கூறினார்.

 

இருப்பினும் அதன் பின்னர் நடைபெற்ற மாநில காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், கூட்டத்தில் மம்தாவிற்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், தங்களோடு கூட்டணியில் உள்ள இடது முன்னணியோடு ஆலோசித்து வேட்பாளரை அறிவிக்கப்போவதாகவும் தெரிவித்தார். இதனால் மம்தாவிற்கு எதிராக காங்கிரஸ் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

 

இந்தநிலையில், தற்போது மம்தாவை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிடாது என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அறிவித்துள்ளார். மேலும், மம்தாவிற்கு எதிராக காங்கிரஸ் பிரச்சாரமும் செய்யாது என அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "முதல்வருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது, எந்தவகையிலாவது பாஜகவிற்கு மறைமுகமாக உதவக்கூடும் என காங்கிரஸ் நினைக்கிறது. மத்திய தலைமை அதை விரும்பவில்லை" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்