கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியின் தலைவருமான குமாரசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், நான் ஆரம்பம் முதலே காங்கிரசுக்கு எதிராகவே போராடி வருகிறேன். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டோம். காங்கிரசாரின் சதியால் தேர்தலில் எங்களால் இலக்கை அடைய முடியவில்லை. வெறும் விளம்பரத்திற்காக காங்கிரசார் போராட்டம் நடத்துகிறார்கள். ராஜஸ்தான் அரசை கவிழ்ப்பதைக் கண்டித்து இங்குள்ள காங்கிரசார் போராட்டம் நடத்துகிறார்கள். இதனால் கர்நாடக மக்களுக்கு என்ன பயன்?.
ராஜஸ்தானில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்க பா.ஜ.க. முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் அதே மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி என்ன செய்தது. ஆட்சியை ஆதரித்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.க்களை தன்னுடைய கட்சியில் சேர்த்து கொண்டது காங்கிரஸ். இது மட்டும் குதிரை பேரம் ஆகாதா?
குதிரை பேரம் என்ற வார்த்தை அரசியலில் வந்ததற்கே காங்கிரஸ் கட்சிதான் காரணம். கடந்த காலங்களில் கர்நாடக மாநிலத்தில் ஒரு ராஜ்யசபா இடத்திற்காக, ஜனதா தள கட்சியைச் சேர்ந்த எட்டு எம்.எல்.ஏ.க்களை வாங்கியது உண்மைதானே. இவற்றையெல்லாம் செய்த காங்கிரஸ் நாடு தழுவிய அளவில் 'சேவ் ஜனநாயகம்' என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. இப்படி எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டுமே கிரிமினல் கட்சிகள்.
எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்த போது எங்கள் எம்.எல்.ஏ.க்களை வாங்கவில்லையா? 2018 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி சதி செய்யவில்லையா என்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க காங்கிரஸுக்கு நேர்மையான தைரியம் இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பினார், குமாரசாமி.