9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) கொலை புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது. மேலும் கருணாஸ் என்ற அந்த இளைஞர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியைத் தேடியதும் தெரிய வந்துள்ளது. மேலும் கருணாஸ் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவன் என்பது தெரிய வந்தது.
இந்த சம்பவத்தில் பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர். புகாரளித்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் குழந்தையை மீட்டு இருக்கலாம் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காவலர்கள் மீது எழுந்த புகாரை அடுத்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவரும் கூண்டோடு மாற்றப்படுவதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அச்சிறுமியின் கொலை சம்பவம் அந்த பகுதி மட்டுமல்லாது சமூக வலைத்தளங்கள் வாயிலாக பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.நேற்று சிறுமியின் இறுதி சடங்கு நடைபெற்று முடிந்தது.
சிறுமியின் இறுதி ஊர்வலம் காரணமாக நேற்று புதுச்சேரியில் பல கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இந்த கொலை சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியா கூட்டணிக் கட்சிகள் மற்றும் அதிமுக சார்பில் எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதன் காரணமாக பேருந்துகள், டெம்போ, ஆட்டோக்கள் இயங்கவில்லை. வணிக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன. காய்கறி மற்றும் மீன் அங்காடிகள், இறைச்சி கடைகள் திறக்கப்படவில்லை. அரசு பேருந்துகள் மட்டும் போலீசார் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வு எழுத மாணவர்களுக்காக பள்ளி வாகனங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.